வேலூர்: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்
இப்படம் பிப்.9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள திரையரங்கத்தில் ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் பறையடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி மும்மத வழிபாட்டு செய்து கொண்டாடினர்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த பேசியது பேசு பொருளாக மாறியது. “எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார்” என கூறியிருந்தார்.
அதைபோல சமீபத்தில், லால் சலாம் படத்தில் நடித்திருந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா, காவிரி விவகார சமயத்தில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்ட சமூக வலைத்தளப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை போன்று இருந்தால்.. சந்தோஷ் நாராயணன் கூறியது என்ன?