சென்னை: தமிழ்நாடு இசை சங்கத்தின் 2023-24 ஆண்டுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இசையமைப்பாளர் தேவா, பாடகி சின்மயி, பாடகர் மனோ உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குநர் பேரரசு தனது வாக்கைப் பதிவு செய்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக உள்ள தீனாவை கங்கை அமரன் குற்றம் சாட்டியிருந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் பேசுகையில், “4 வருடத்திற்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் அமைதியாக நடக்கும். இந்த முறை கடுமையான போட்டி இருக்கிறது. நான் முதல் முறையாக ஓட்டுப் போடுகிறேன். திருத்தணி படத்தில் இசையமைத்ததற்காக யூனியனில் உறுப்பினராக்கினேன்.
இந்த சங்கத்துக்குப் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் தேவை. இளையராஜா சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்ட உதவுவதாகச் சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்த வாக்கை நிச்சயமாகக் காப்பாற்றுவார். குடும்பத்தில் உள்ள கட்டமைப்பு போலத் தான் இந்த தேர்தல். இது சட்டசபைத் தேர்தல் மாதிரி இல்லை. இதில் மாறி மாறி குறை சொல்வது தவறு. கலைஞர்களுக்கான சங்கம் இது. பொது வெளியில் குறைகளைச் சொல்வதை விட, பொதுக்குழுவில் கருத்துக்களைச் சொல்லலாம். பொது வெளியில் சொல்ல வேண்டாம்” எனக் கங்கை அமரனைச் சாடினார்.
மேலும், மறைந்த பாடகி பவதாரினி பெயரில் சிலர் மோசடி செய்ததாகக் கங்கை அமரன் குற்றம் சாட்டியிருந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தவர், “பவதாரிணி பெயரில் சிலர் மோசடி செய்ததாக வந்த குற்றச்சாட்டு குறித்து கங்கை அமரன் சொன்னதைப் பார்த்தேன், அதற்கான சரியான ஆதாரம் இருந்தால் பொதுக் குழுவில் சொல்லி இருக்கலாம். ஏன் அவர் பொதுக் குழுவிற்கே வரவில்லை. சங்க தேர்தலுக்கும், பொதுத் தேர்தலுக்கு வித்தியாசம் இருக்கிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஒருவர் 4 முறைக்கு மேல் தேர்தலில் நிற்பது தொடர்பாக இளையராஜா சொன்ன கருத்துக்குப் பதில் அளித்தவர், “சேவை மனப்பான்மையுடன் வருபவருக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது. பொது வெளியில், வீடியோ வெளியிடுவது தவறான அணுகுமுறை. இப்போது யாரிடமும் போனில் பேசக் கூட பயமாக இருக்கிறது. இளையராஜாவிற்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவர் பேனில் பேசியதை வெளியிட்டவரை அவர் கண்டிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்; 1.30 மணி நிலவரப்படி 398 ஓட்டுகள் பதிவு!