ஆந்திர பிரதேசம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடித்த படங்களும் பெரிய வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான் கேப்டன் மில்லர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தற்போது இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில், தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இப்படம் D51 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன.30) காலை, ஆந்திரா மாநிலம் திருப்பதி மலை அடிவாரத்தில், அலிப்பிரி என்ற பகுதியில் நடைபெற்றது. இதனால் போலீசார், திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பி விட்டதால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக சாலையில் 2 கி.மீ தூரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். அப்போது போலீசார் தலையிட்டு, போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "சங்கி என்பது கெட்ட வார்த்தை அல்ல" - மகளின் பேச்சுக்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!