திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத் (AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு பதவி விலகினர். இந்நிலையில், பிரபல நடிகை பார்வதி திருவோத்து ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியுப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “நடிகர்கள் ராஜினாமா செய்த செய்தி கேட்டு இது எவ்வளவு கோழைத்தனமான செயல் என தோன்றியது. இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பதவி விலகுவது கோழைத்தனமானது. இந்த விஷயம் குறித்து நடிகர்கள் சங்கம் அரசிடமாவது பேசியிருக்க வேண்டும். இதே நடிகர் சங்கம் தான் நடிகைகளை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் சங்கத்திற்கு வரவேற்றது.
நான் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்துள்ளேன், அது எவ்வாறு செயல்படும் என எனக்கு தெரியும். இந்த விவகாரத்தில் பெண்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பெண்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது. பெண்களின் வேலை குறித்து அல்லது மனநலம் குறித்து எவரும் கவலை அடைவதில்லை.
எந்தப் பெண்ணும் இந்த பிரச்னையை ஏற்படுத்தவில்லை, ஆனால் பெண்கள் பழியை சுமக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கை முன்பாகவே வெளியாகியிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராட வேண்டிய தேவை இல்லை. ஒவ்வொரு பெண்ணும், தான் சந்தித்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என கூறியுள்ளார். நடிகை பார்வதி, கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் நடித்த தங்கலான் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ”ரஜினி, கமல், விஜய் கால்ஷீட் வைத்துக்கொண்டு கதை இல்லாமல் அலைகின்றனர்”.. வாழை கதை சர்ச்சை குறித்து சோ.தர்மன்! - vaazhai Movie story issue