சென்னை: கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் (SK productions) சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சூரி, அன்னா பென், வெற்றிமாறன், வினோத்ராஜ், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய மிஷ்கின், “ஒரு தாய்க்கு அனைத்து குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான். ஒரு தனிமையான பெண் தான் இந்த கொட்டுக்காளி” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மிஷ்கின், “எதற்கு சினிமாவிற்குள் வருகிறீர்கள் என்று என்னுடைய உதவி இயக்குநர்களிடம் கேட்பேன். அதற்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது அவர்களின் பொதுவான பதிலாக உள்ளது. ஒருவேளை நான் இயக்குநர் பி.எஸ்.வினோத்திடம் கேட்டிருந்தால் இந்த உலகத்தை என் கதை மூலமாக மாற்ற வேண்டும் என்று கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். இந்த படத்திற்கு ஏன் கொட்டுக்காளி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
பின்னர், பி.எஸ்.வினோத்ராஜ் குறித்து பேசுகையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்று இயக்குநர் கூறினார். நான் அவரை கோபத்துடன் முறைத்து பார்த்தேன். ஆனால், இந்த கொட்டுக்காளி படத்தின் மூலம் இயக்குநர் பி.எஸ்.வினோத் என்னை செருப்பால் அடித்துவிட்டார். இந்த படத்தை மக்கள் பார்க்கவில்லை என்றால் நான் நிர்வாணமாகக் கூட நிற்கிறேன். தமிழ் சினிமாவில் கலைப் படைப்பை வெகுஜன சினிமாவாகவே பார்க்கும் நிலை உள்ளது.
இப்போதெல்லாம் 16 வயதினிலே போன்ற படம் எடுத்தால் கூட ஓடுமா என்று தெரியவில்லை, அந்த அளவிற்கு சினிமா மாறிவிட்டது. இப்படம் தாயின் கருவறை போன்றது. நான் இளையராஜாவின் காலை தொட்டு முத்தம் கொடுத்தேன். அதன் பிறகு இந்த படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் காலை நான் முத்தமிட விரும்புகிறேன். ஒரு நல்ல கதை, நல்ல கதாசிரியர் தோற்றுப் போவதில்லை சமூகத்தால் கொலை செய்யப்படுகிறார்.
இப்போதெல்லாம் தமிழ் நடிகைகள் நல்ல படங்களில் நடிப்பதில்லை. படத்தில் எத்தனை பாடல்கள் என்று தான் கேட்கிறார்கள். மோசமான காட்சிகளையும், படங்களையும் பார்க்கிறோம் தப்பில்லை, ஆனால் இந்த படம் தமிழ் சமுதாயத்தை பற்றி கூறுகிறது. இதை விட அரசியலை விரிவாக பேசிய படத்தை நான் பார்த்ததில்லை" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தனுஷ் படங்களில் ராயன் வசூல் சாதனை.. உலக அளவில் மொத்த வசூல் என்ன? - Raayan box office collections