ஐதராபாத் : கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வாக்கில் மும்பை பாந்த்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அபார்மண்டஸ் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் என்பவர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட அன்மோல் பிஷ்னோய், "இது டிரெய்லர் தான், அடுத்த முறை குறி நிச்சயம் தப்பாது" என்று பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரை சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டு உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
குருகிராம் பகுதியை சேர்ந்த விஷால் என்ற கலு, சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என்றும் கடந்த மார்ச் மாதம் தொழிலதிபர் சச்சின் முன்ஜெல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மற்றொரு நபரை தேடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
விஷால் மற்றும் மற்றொரு நபரும் ராய்கட் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை விலைக்கு வாங்கியதும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அந்த இரு சக்கர வாகனத்தை அருகிலேயே விட்டுச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த வாகனம் பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.
இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதாக எண்ணப்படும் நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு பிரிவு போலீசார் விரைந்து விசாரணையை துவக்கி உள்ளதாகவும், வழக்கு மும்பை போலீசாரிடம் இருந்து குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளை கேட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில் ஏறத்தாழ 5 மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : நடிகர் சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம்! பிஷ்னாய் கும்பல் கொலை மிரட்டல்! - Salman Khan House Gunshot