சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், இயக்குநர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் ’இந்திய ஜனநாயகப் புலிகள்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியிருந்த அவர், அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் முதல் மாநாடு, கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போதைப்பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மன்சூர் அலிகான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஆரணி தொகுதிக்குப் பதிலாக வேலூர் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஆரணி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஜந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் தனது இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதாகவும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீதான வழக்கு; சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?