சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏற்கனவே ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வேட்டையன் திரைப்படம் வெளியானதால், கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்பேஸ் தளத்தில் ரசிகர்களிடம் உரையாடிய போது, “கங்குவா பட ப்ரமொஷனுக்காக சூர்யா ஒரு மாதம் ஒதுக்கியுள்ளார். கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அதேபோல் சீன, ஜப்பானிய மொழிகளிலும் திரையரங்குகளில் கொஞ்சம் தாமதமாக வெளியாகும். கங்குவா படத்தின் ஓடிடி பதிப்பு 38 மொழிகளிலும் வெளியாகும். நடிகர் சூர்யா தமிழ் மொழியில் மட்டும் தான் டப்பிங் செய்துள்ளார். ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பம் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி சூர்யா குரலை 38 மொழிகளில் டப்பிங்கில் பயன்படுத்தி உள்ளோம்” என கூறியுள்ளார்.
அதேபோல் கங்குவா திரைப்படம் குறித்து இயக்குநர் சிவா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கங்குவா திரைப்படம் டைட்டில் கார்டு தவிர்த்து 2 மணி 26 நிமிடம் எனவும், அதில் வரலாற்று கதை 2 மணி நேரம் எனவும், தற்போதைய காலத்தில் வரும் சூர்யாவின் ஃபிரான்சிஸ் கதாபாத்திரம் 26 நிமிடம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ஆண்கள் அணி... இந்த வார எலிமினேஷனில் யார்?... பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு!
கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும், அந்த நிகழ்விற்கு ரஜினிகாந்த் மற்றும் பிரபாஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்