சென்னை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ரஞ்சித். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், 2003ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது குழந்தை c/o கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் உடன் இயக்குநர் பேரரசு, பிரவின் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய பிரவின் காந்தி, “நான் எப்போதும் சாதிப் படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு எதிரானவன்.
பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது. சினிமாவில் சாதியைச் சொல்லவேக் கூடாது. அப்படி சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன். ரஞ்சித் ஹாப்பி ஸ்ட்ரீட் என்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர்.
எனது சகோதர்கள் கெட்டுப்போகக் கூடாது என நினைப்பவர். இவர் நிச்சயம் நல்ல படம் எடுத்திருப்பார். அது சாதியப் பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் நல்ல படமாக சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருக்கும். திட்டம் போட்டு நாடக காதல் செய்து நாட்டை நாசமாக்கும் எவரையும் தண்டிக்கும் உரிமை நல்லவர்களுக்கு உண்டு. ரஞ்சித்திற்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், “இப்படம் நம்மை அடிப்பவர்களை நாம் திருப்பி அடிக்க தயாராகி விட்டோம் என்பதை உணர்த்தும். எல்லோரும் நசுக்குறாங்க, பிதுக்குறாங்க என்று சொல்லிட்டே இருக்காங்க. நாங்கள் இதுவரை சினிமாவில் யாரையும் நசுக்கவும் இல்லை, பிதுக்கவும் இல்லை. நீங்க பிதுக்குனா நாங்க நசுக்குவோம். இன்னும் பேச வேண்டாம். ஏற்கனவே வழக்கு போட்டு குண்டாஸ் போட பிளான் பண்றாங்க. நான் மாட்ட மாட்டேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
இதையும் படிங்க: "2K கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக ஹரா இருக்கும்" - நடிகர் மோகன் நம்பிக்கை! - Actor Mohan HARA Movie