சென்னை: ஸ்ரீ வைகுண்டம் எம்எல்ஏ அமிர்தராஜ் எழுதியுள்ள கிராபிக்ஸ் காமிக் நாவலான "என்ட் வார்ஸின்" தமிழ்ப் பதிப்பான "இறுதிப்போர்" புத்தக வெளியீட்டு விழா இன்று(பிப்.17) சென்னையில் நடைபெற்றது. இந்த நாவலின் தமிழ்ப் பதிப்புக்குப் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனங்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு முதல் பதிப்பைப் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் அமிர்தராஜ் எம்எல்ஏ கூறுகையில், "அமிர்தராஜ் ரொம்ப அழகான உலகை உருவாக்கியுள்ளார். இது எதிர்காலத்தில் நடப்பது போன்ற சூப்பர் ஹீரோ நாவல். தமிழில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நிறைய இலக்கியம் இருக்கிறது. ஆனால், நடுவில் இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய இலக்கியங்கள் இல்லை. இதுபோன்ற இலக்கியங்கள் நிறைய வரவேண்டும் என்று அமிர்தராஜ் இதனைத் தொடங்கியுள்ளார். அழகான காமிக் புக் இது.
காமிக் என்பது தமிழில் புதிது கிடையாது. ஆனால், அதில் சூப்பர் ஹீரோ உலகை ரொம்பவும் கலர்புல்லாக கொண்டுவந்துள்ளனர். தொடர்கதையாக இது வருகிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொண்டுவரத்தான் காமிக் கொண்டுவரப்படுகிறது. குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை அதிகரிக்க இதுபோன்ற காமிக்ஸ் புத்தகங்கள் உதவும்.
இன்னும் நிறைய நூல்கள் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இதனைக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். இது குறித்து அமிர்தராஜ் கூறுகையில், "இன்று இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறோம். அதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். சென்னை மக்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் நெருங்க, நெருங்க உட்கட்சிக்குள்ளே வெடிக்கும் பூகம்பங்கள்.. சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?