சென்னை: தமிழ்த் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல் நாளை (பிப்.18) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் குறித்து சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "திரைப்பட உலகில் தொழிலாளர்களுக்காக துவங்கிய முதல் சங்கம் இது தான். இதற்கு பிறகு தான் மற்ற யூனியன்கள் எல்லாம். அந்த காலத்தில் தின சம்பளம் கிடையாது. அவர்கள் போராடி வாங்கி தந்தனர். அவர்கள் கருணையால் நாங்கள் நன்றாக இருக்கிறோம்.
இளையராஜா வந்து உட்கார்ந்து இருக்க வேண்டிய இடம் இது. எங்கள் வீட்டில் துக்க செய்தி நடந்தது உங்களுக்கு தெரியும். அதனால் அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்பட்டு கொள்கிறேன். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதால் தான் அத்தனை பேரும் எங்களுடன் இருக்கிறார்கள்.
இந்த சங்கத்தில் தொடர்ந்து ஆண்டவர்கள் யாருமில்லை. ஒருவருக்கு 2 வருடம் பதவி. 2 வருடம் நீட்டித்து கொள்ளலாம். சங்க விதிப்படி ஒருவருக்கு 4 வருடம் தான் விதி. இப்போது நடக்கும் தேர்தலில் தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அடுத்தும் நாம் தான் ஆள போகிறோம் என்று இருக்கிறார்.
அனைவரும் தலைவர்களாக இருந்து அனுபவத்தை பெற வேண்டும் என்று இளையராஜா உட்பட அனைவரும் கூறி இருக்கிறோம். இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது" என்றார். பின், கரோனா காலத்தில் பணம் கோரி பலர் கையெழுத்து போட்டதாக சில ஆவணங்களை காட்டியவர், தொடர்ந்து பேசுகையில், இறந்து போன பவதாரிணி கையெழுத்து போட்டு கூட பணத்தை எடுத்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய 80 லட்சத்துக்கும் மேல் பணத்தை சுருட்டியுள்ளனர். அது தெரிந்து விடும் என்பதால் சரிசெய்ய மறுபடியும் தலைவராக நினைக்கிறார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இன்றைக்கு இருப்பவர்களில் திரைப்பட உலகின் இசைக்கு இளையராஜா தான் முக்கியமான ஆளாக இருக்கிறார்.
தீனா நீ பண்றது சரியில்லை. ஒருவர் 4 வருடம் தான் என சொல்லியும், அவர் சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாருன்னு யாராவது சொல்வாங்களா. இளையராஜாவை தூக்கி எறிந்து பேசிய ஆள் எங்களுக்கு தேவையில்லை.
எங்களை வளர்த்து விட்டவர். நம் அறிவை வளர்த்தவர் இளையராஜா. அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்பது போல தீனா இருக்கிறார். இதை பற்றி நான் அண்ணாமலையிடம் சொன்னேன். மேலே மோடி கீழே இவர். அப்போது மோடிக்கு பிறகு இவர் தானா. அந்த மாதிரி திமிர், தெனாவட்டில் இருக்கும் ஆட்கள் நமக்கு வேண்டாம். நாங்கள் குறை சொல்லவில்லை. யூனியனை குழப்பி வைத்திருக்கிறார். அவர் தேர்தலில் தலைவராக நிற்க கூடாது என்று நாங்கள் நினைத்தோம்.
அதையும் மீறி நான் நிற்பேன் என்று இருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு போட்டு அதுவும் வேறு மாதிரி போய் விட்டது. நாங்கள் எதிர்க்கட்சி இல்லை. ஆளுங்கட்சி தான். ஆளப்போகிற கட்சி நாங்கள் தான். எங்கள் நியாயத்தை சொல்ல நினைத்தோம்" என்றார்.
இதையும் படிங்க: இளம் வயதிலேயே தங்கல் பட நடிகை மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!