சென்னை: 90களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இரண்டு இசை ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த காலம். அந்த காலகட்டத்தில் இசைஞானியின் வாரிசு என்ற பெரும் எதிர்பார்ப்புடனும், சுமையுடனும் காலடி வைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. 1997இல் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது 16வது வயதில் அரவிந்தன் படத்தின் பாடல்களும், அப்படமும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அடுத்து அவர் இசையமைத்த ’வேலை’, ’கல்யாண கலாட்டா’ ஆகிய படங்களாலும் எந்த வித மாற்றமும் நிகழவில்லை. இந்நிலையில், இயக்குநர் வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது தான் தமிழ் சினிமா ஆடியன்ஸ் இவரை கவனிக்கத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து, யுவன் மாஸ் மசாலா ஆடியன்ஸ்களுக்காக இறங்கி அடித்த படம் 'தீனா'. இதற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஏறுமுகம் தான்
யுவன் - நா.முத்துகுமார் கூட்டணி: யுவன் பற்றி எழுதுகையில் நா.முத்துகுமார் பற்றி எழுதாமல் கடந்து போக முடியாது. அந்த வகையில், யுவன் இசை வாழ்வில் முக்கிய பங்காற்றியவர் நா.முத்துகுமார். 1,500 பாடல்களுக்கு மேல் நா.முத்துகுமார் எழுதியிருந்தாலும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி என்றால் தனித்துவமாக தெரியும். செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் யுவன் - நா.முத்துகுமார் கூட்டணியில் வெளியான 'தேவதையை கண்டேன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
இதனைத் தொடர்ந்து, இக்கூட்டணியில் வெளியான '7G ரெயின்போ காலனி' படப் பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜாவின் கரியரில் சிறந்த இசையமைப்பில் ஒன்று என கூறலாம். இது மட்டுமல்ல, தீபாவளி திரைப்படத்தில் போகாதே, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், யாரடி நீ மோகினி படத்தின் ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’, பையா பட பாடல்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அனைத்திற்கும் உச்சமாக மகுடம் சூடியது போல், இக்கூட்டணியில் உருவான 'பறவையே எங்கு இருக்கிறாய்', 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்', 'ஆனந்த யாழை' ஆகியவை இன்றளவும் கல்ட் கிளாசிக் பாடலாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. புதுப்பேட்டை படத்தின் ‘ஒரு நாளில்’ போன்ற வாழ்க்கை தத்துவப் பாடல் இனி காண்பது கடினம் தான்.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இளையராஜா பாடல்கள் அவர்கள் படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது போல், அஜித், தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால், ஆர்யா ஆகியோர் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை தூணாக இருந்தது. அஜித் ரசிகர்களிடம் தல படத்தின் பின்னணி இசையில் எது மாஸானது என கேட்டால், கண்ணை முடிக் கொண்டு மங்காத்தா எனக் கூறுவர். அது மட்டுமா, அஜித் நடித்த பில்லா இரண்டு பாகங்களிலும் யுவன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் அதகளப்படுத்தியிருப்பார்.
BGM King யுவன்: ஒரு பக்கம் நடிகர்கள் என்றால், யுவனின் இசை ஒவ்வொரு இயக்குநரின் கதைகளுக்கும் வேறுபட்டு உயிரோட்டமாக இருக்கும். செல்வராகவன், ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, லிங்குசாமி ஆகியோரது படங்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது யுவன் இசை என்றால் மிகையாகாது.
யுவன் ஷங்கர் ராஜாவை ‘BGM King’ என்று கூறலாம். மகிழ்ச்சி, காதல், வீரம் என அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களைக் கட்டி போடும் வல்லமை பெற்றவர். காதல் சோகம் என்றால் இளைஞர்கள் மனதிற்கு இன்றளவும் ஆறுதலாக இருப்பது யுவன் பாடல்கள் தான்.
’கம் பேக் யுவன்’: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்கள் உச்சத்தில் இருந்த காலம் போன்று, அவர்களுக்கு இறங்கு முகமும் ஏற்பட்டது. அதேபோல், யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் இறங்கு முகம் ஏற்பட்டது. யுவன் தொட்டதெல்லாம் பொன்னாக மாறிய காலம் சென்று, அவரது பாடல்களை ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். யுவன் இசையமைக்கும் படங்களில் எல்லாம் 'யுவன் கம்பேக் எப்போது' என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் எவ்வாறு இளையராஜாவிற்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை ரசிக்கத் தொடங்கினார்களோ, அதேபோல் தற்போது யுவன், ஹாரிஸ் காலத்திற்குப் பிறகு இசை ரசனையில் மாற்றம் ஏற்பட்டு அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற புதிய தலைமுறை இசையை ரசித்து வருகிறோம்.
அதேபோல், ஒரு இசையமைப்பாளரிடம் சிறந்த இசையைப் பெறுவதற்கு குறிப்பிட்ட படத்தின் இயக்குநர் விவரிக்கும் விதம், திரைக்கதை, சூழல் ஆகியவை மிகவும் முக்கியமானது. யுவன் இசையமைக்கும் படங்கள் தற்போது குறைந்துள்ள போதிலும், கோட் (GOAT), ஏழு கடல் ஏழு மலை, ஸ்டார், டாடா, மாநாடு, லவ் டுடே, நானே வருவேன், விருமன் போன்ற படங்கள் மூலம் தன் இசையை நிருபித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார் விஜய்! - Vijay leaves for shirdi temple