சென்னை: இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சவரக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது, டெவில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். டச் ஸ்க்ரீன் மற்றும் மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், ஆதித்யா, விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “தற்போது தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறேன்.
25 ஆண்டுக்கால திரை வாழ்வில் விஜய் சேதுபதி போன்ற அசாதாரணமான நடிகரைப் பார்த்ததில்லை. அத்தனை அர்ப்பணிப்புடன் இருக்கிறார் ஒவ்வொரு நாளும் மெருகேற்றிக்கொண்டே இருக்கிறது அவரின் நடிப்பு. விஜய் சேதுபதிக்கு இந்த படம் பெரிதாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இந்த படத்தில் பெரிய காஸ்ட் இருக்கிறது. அஞ்சாதே படத்துக்குப் பிறகு நான் வேகமாக எடுத்த படம் ட்ரெயின் தான் என்றார். இதனைத் தொடர்ந்து ராமர் கோயில் திறப்பு விழா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் “ராமர், அல்லா, ஏசு, புத்தர், என அனைத்து கடவுள்களும் மனசுக்குள்தான் உள்ளார்கள்.
ராமர் பெரிய அவதாரம், ஒரு காவியத் தலைவன். ராமர் குறித்த அரசியல் கருத்துக்கள் சொல்வார்கள் அது எல்லாம் எனக்குத் தெரியாது. சினிமாதுறையைச் சேர்ந்த நான் அரசியல் கருத்துச் சொல்லக்கூடாது என முடிவு செய்துள்ளேன். மேலும் என்னைப் பொறுத்தவரையில் நான் எடுக்கும் சினிமாதான் என்னுடைய அரசியல்.
அதில், மனித அவலம், பிற மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும். மற்றவர்களுக்கு அன்பு எப்படிச் செலுத்த வேண்டும் என்பதைத் தான் எனது அரசியலாகப் பார்க்கிறேன். அதை எப்படி எழுத வேண்டும் என்று பார்க்கிறேன்.
சமகாலத்தில் நிகழும் அரசியலை நான் பேசக் கூடாது என்று நினைக்கிறேன். ஒரு சினிமா கலைஞனாக இந்த முடிவு எடுத்துள்ளேன். நிறையப் பேர் அரசியல் குறித்துப் பேசுகிறார்கள் என்றால் அது அவர்களின் கருத்துச் சுதந்திரம்.
இதுகுறித்து, நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் சார்ந்து ஒரு கருத்துச் சொன்னால் அது தவறாக ஆகிவிடும். ஒரு சினிமாக்காரனாக எனது அரசியல் எனது கதைகள் மூலம் வெளியே வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பயோஃபிக் - சரத்குமார் நடிக்கிறார்?