சென்னை: வித்தியாசமான படங்களை இயக்கி கொண்டிருக்கும் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போட். இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிம்புதேவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் சிம்புதேவன், ''நான் இதுவரை எடுத்த படங்களை போலவே இந்த படமும் வித்தியாசமான படமாக எடுக்கும் வாய்ப்பு இருந்தது. சொன்ன மாதிரியே எடுத்துக் கொடுங்கள் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை கொடுத்தார்'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், ''பொதுவாக வரலாற்றில் நமது விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை டெல்லியும், மும்பையும் சொல்லும் அளவுக்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கில படங்களிலும் இந்தியர்கள் காட்டப்படமாட்டார்கள். ஆனால், இரண்டாம் உலகப் போரில் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர் என தகவல் உள்ளது. மேலும், இந்த படத்தை கடலில் படப்பிடிப்பு செய்வது மிகவும் கடினமாக இருந்தது'' என்று அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு தேவன், '' நான் இதுவரை எட்டு படங்கள் இயக்கியுள்ளேன். கால தாமதம் ஏற்படுவதற்கு சூழல் தான் காரணம்'' என்றார்.
படத்தின் தலைப்பு ஏன் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது என கேள்விக்கு பதிலளித்த அவர், இப்படத்திற்கு நாங்கள் முதலில் வைத்த பெயர் ''பக்கிங்காம் வீரனும் பரதேசியின் பேரனும்''.. ஆனால், மார்க்கெட்டிங் தேவை எனும் வரும்போது ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
24ம் புலிகேசி வராததற்கு வடிவேலு மீது கோபம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, '' அதெல்லாம் இல்லை.. நாம் முயற்சி பண்ணலாம், அது நடப்பதும் நடக்காததும் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டது. அது நடந்து இருந்தால் நன்றாக இருக்கும். நடக்க வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். 24ம் புலிகேசி வராததற்கு எங்களை தாண்டி தமிழக மக்களுக்கு இழப்புதான். நடக்கும் என்று நம்புகிறேன்'' என்று சிம்புதேவன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 90 சதவீதம் லாபம் பெறும் நடிகர்கள் ஏன் புரோமஷனுக்கு வருவதில்லை? ஆர்.கே.செல்வமணி விளாசல்!