சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தை சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெற்றது.
முன்னதாக, லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்படப் பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது. இந்த நிலையில், லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்பட பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய திரைப்பட விருதுக்கு நன்றி. தனுஷின் கேப்டன் மில்லர் படம், ஸ்பெயினின் பைட்டிங் தி வுல்ஃப் பேக், ஜெர்மனியின் சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்சி, ஜப்பானின் தி பாரடெஸ் உள்ளிட்ட படங்களை வென்று மதிப்புபிக்க விருதை பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து கேப்டன், மில்லர், பாக்ஷாக் (Bhakshak), ஜெர்மனியில் இருந்து சிக்ஸ்டி மினிட்ஸ் (Sixty Minutes), தி ஹார்ட்பிரேக் ஏஜென்சி (The Heartbreak Agency), ஸ்பெயினில் இருந்து பைட்டிங் தி வுல்ஃப் பேக் (Fighting the wolf pack), ஜப்பானில் இருந்து தி பாரடெஸ் (The Parades), பிலிப்பைன்ஸில் இருந்து ரெட் ஒலேரோ: மபுஹே இஸ் அ லை (Red ollero: Mabuhay is a lie) உள்ளிட்ட படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் படம் ‘சிறந்த அயல் மொழி திரைப்படம் - Best Foreign Language Film’ என்ற விருதை வென்றது. படக்குழுவின் சார்பாக இவ்விருதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: 77வது லோகார்னோ திரைப்பட விழா; ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு! - 77th Locarno Film Festival