சென்னை: பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் இன்று (ஜூலை 26) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் சென்னையில் ரோகிணி திரையரங்கில் இன்று காலை ரசிகர்களுடன் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் படம் பார்த்தனர். இதனைதொடர்ந்து நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், "எனக்கு முதல் நாள் முதல் காட்சி (fdfs) அனுபவம் நன்றாக இருந்தது. தனுஷின் 50வது படத்தில் நடித்துள்ளது பெருமையாக உள்ளது" என்றார்
இதனைதொடர்ந்து ரோகிணி திரையரங்கில் ராயன் படம் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக உள்ளதாக கருத்து தெரிவித்தனர். ரசிகர் ஒருவர் பேசுகையில், "ராயன் திரைப்படம் வேற லெவலில் உள்ளது. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தைவிட இப்படத்தில் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் படத்தையும் நன்றாக இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவும் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார்" என்றார்.
மற்றொரு ரசிகர் பேசுகையில், "50வது படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 'தான் இயக்கி இருந்தால்கூட ராயன் படத்தை இந்த அளவு எடுத்திருக்கமாட்டேன்' என்று செல்வராகவன் கூறியிருந்தார். ராயன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பயங்கரமாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் ரியலாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் தனித்துவமாக இருந்தது" என்றார் அவர்.
தனுஷின் 50வது படம் குறித்து பேசிய ரசிகர், "விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் மகாராஜா நல்ல வரவேற்பை பெற்றதுபோல், ராயன் திரைப்படம் தனுஷிற்கு இருமடங்கு ஹிட்டாகும்" எனக் கூறினார்.
அதேபோல் மற்றொரு ரசிகர் பேசுகையில், "துரோகத்தை மையப்புள்ளியாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் ராயன் கேங்ஸ்டர் கதையாக உள்ளது. படத்தில் தனுஷ் மட்டுமில்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர். மேலும் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்களுக்காக பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை தவிர ராயன் திரைப்பட வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ.ஆர். ரஹ்மான் இசை" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'ராயன்' பட ரிலீஸ்.. சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ்! - dhanush in rohini theatres