சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் இசையமைக்கும் பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகும். இவரது பாடல்களின் ஒலியமைப்பு துல்லியமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இசையமைப்பில் பிரதர் படத்தில் உருவான 'மக்காமிஷி' என்ற பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு தொடர்புடைய வழக்கு ஒன்று நடந்து வருகிறது. திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி, அதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு, ஜிஎஸ்டி இணை இயக்குநர் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஹாரிஷ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட மனுவில் தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால், ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சரவணன் அமர்வு, வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும், அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இசை கலைஞர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு விதிக்கப்படுகிறது, அதில் உள்ள நடைமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். மத்திய அரசு பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியை பயன்படுத்தி வருகிறது.
இதில் சினிமாத்துறையை பொறுத்தவரை கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்களுக்கு சேவைகள் என்ற வகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அடங்கும். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தனக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு (Tax exemption) கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் ஆடிட்டர் மனோகர் ரெட்டி கூறியதாவது, "சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு சேவை அடிப்படையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
தற்போது ஜிஎஸ்டி வரி விதிகள் மாற்றப்பட்டுள்ளது. முன்னர் ஒருவர் ஒட்டுமொத்தமாக தனது படத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டால், சேவை கட்டணம் வராது, தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதுவாக இருந்தாலும் ஜிஎஸ்டி கட்டித்தான் ஆக வேண்டும். நடிகர்களின் சம்பளத்திற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரும். இசையமைப்பாளர்கள் தங்களிடம் பணி புரியும் இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எல்லாம் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது.
தற்போது உள்ள ஜிஎஸ்டி விதியை பொறுத்தவரையில் யாரும் விலக்கு கேட்க முடியாது. சேவை போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் இருந்தாலே ஜிஎஸ்டி கட்ட வேண்டும்" என்றார். இந்த விவகாரம் குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பத்திரிகையாளர் பிஸ்மி பேசியது, "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்து இருக்கலாம். இல்லை என்றால் ஜிஎஸ்டி தொகை அதிகம் வந்திருப்பதால் அதனை இழுத்தடிக்கும் நோக்கில் வழக்கு தொடர்ந்து இருக்கலாம்.
இதையும் படிங்க: சமூக கருத்து சொல்லும் ரஜினியின் கமர்ஷியல் திரைப்படம்... ’வேட்டையன்’ 2ஆம் நாள் வசூல் என்ன?
அதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நடிகர்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி அவர்கள் கட்டாமல் தயாரிப்பாளர்களை கட்ட சொல்வார்கள். உதாரணமாக ஒரு நடிகர் ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால், 18 லட்சம் ஜிஎஸ்டியை தயாரிப்பாளரே கட்டி விடுவார். நடிகர்களுக்கு ஒரு கோடி சம்பளமாக சென்றுவிடும். தற்போது உள்ள நடிகர்கள் இதுபோன்றுதான் ஊதியம் பெறுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்