சென்னை: இந்தியத் திரையுலகில் இசை மேஸ்ட்ரோ என்றும், இசைஞானி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தலைமுறை கடந்தும் இவரது இசை அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.
அத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தை 'மெர்குரி குரூப் இந்தியா' தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அத்தகவலை அந்த தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது.
தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்ட கனெக்ட் மீடியா என்கிற நிறுவனத்துடன் இணைந்து, மெர்குரி மூவிஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமே இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை முதலில் தனுஷ் இயக்குவார் என்று கூறப்பட்டது நிலையில், தற்போது இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி இம்மாதம் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அன்பிற்குரிய நண்பர்களே, இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றிய வரவிருக்கும் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா முதல் அறிவிப்பு மார்ச் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிகழ்வில் பல பிரபலங்கள், தொழில்துறையினர் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகைகள், மற்றும் இயக்குநர் உள்ளிட்டவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலுக்காக காத்திருக்கும் தங்கலான்.. பா.ரஞ்சித் கொடுத்த புதிய அப்டேட்!