சென்னை: நடிகர் சிவக்குமார் தனது ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் 45 ஆண்டுகளாக ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். அவருடன் இணைந்து சூர்யாவின் அகரம் அறக்கட்டளையும் இந்த உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், அந்த அறக்கட்டளைகளின் 45வது ஆண்டு விழா சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், "இங்குள்ள மாணவர்கள் நீங்கள் என்னைத்தான் முன்னுதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். சூர்யா, கார்த்தி இருவரும் சிவகுமார் என்ற நடிகனின் பிள்ளைகள். ஆனால் நான் ஏழைத்தாயின் மகன். அப்படி தான் கஷ்டப்பட்டு படித்தேன்.
நான் பிறந்தபோதே அப்பா இல்லை மறைந்துவிட்டார். நாங்கள் சாப்பிட அவ்வளவு கஷ்டப்பட்டோம் வெறும் சோழம் தான். பஞ்சம் போன்ற காலங்களில் அதுவும் கிடையாது. ஒட்டகம் பால் பவுடரை சாப்பாடாக எடுத்துக்கொண்டுள்ளேன். பொங்கல் சோறு போட முடியாமல் என்னை ஏன் பெற்றாய்? என்று என் அம்மாவிடம் கேட்டுள்ளேன்.
365 ரூபாயில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டேன். ஆனால் இப்போது கார்த்தி மகனை பிரிகேஜி படிக்க இரண்டரை லட்சம் ஆகிறது. 5 ரூபாயால் அப்போது என்னால் பள்ளி மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுக்க முடியவில்லை அதனால் 50 ஆண்டுகளாக குழுப் புகைப்படத்தை நான் பார்ப்பதே இல்லை. ஐந்து கோடி புகைப்படங்களில் என்னுடைய முகம் உள்ளது. ஆனால் அன்று ஐந்து ரூபாய் கொடுத்து குழுப் புகைப்படம் எடுக்க முடியவில்லை.
நாம் அனைவரும் ஒரே ரத்தம். நாம் இமயமலையையே தொட முடியும். கல்வியும் ஒழுக்கமும் தான் நம்மை இமயத்தில் ஏற்றும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்