சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடிக்கும் படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி, இயக்குநர் வெற்றிமாறன், பாடலாசிரியர் சினேகன், சூப்பர் சுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "லேட்டா வந்ததற்கு சாரி. இந்த படத்தின் ட்ரெய்லர் பிடித்திருந்தது. என்னுடைய எதிர்நீச்சல், காக்கிசட்டை படத்தின் இயக்குநர் செந்தில். அவருக்கு வெற்றிப் படமாக இது அமையட்டும். எப்போது எனக்கு கதை சொல்ல வந்தாலும் நானும் கதை சொல்லுவேன். சூரி உண்மையில் எனக்கு அண்ணன் தான். அவரும் என்னை தம்பி என்று ஆத்மார்த்தமாக கூறுவார். அவருக்கு முதலில் கதை சொன்னது நான் தான்.
சீமராஜா ஷூட்டிங்கில், நீங்கள் ஹீரோவாக ஏன் நடிக்கக்கூடாது என்று கேட்டதற்கு, தம்பி சும்மா இருங்க என்று கூறினார். சில நாள் கழித்து அவரே வந்து வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக என்னிடம் சொன்னார். இப்படியொரு முகம் எல்லாருக்கும் தேவை.
சூரி அண்ணனின் திறமை பற்றி எனக்கு தெரியும். காமெடி பண்ணும் ஒருவரால் எமோஷனல், சீரியஸ் ரோல் கொண்டு வர முடியும். காமெடி பண்றவங்கள யாரும் குறைச்சு நினைக்காதீங்க. விடுதலை படத்தில் வெற்றிமாறன் ஹீரோவாக சூரியை ஒரு உயரத்தில் வச்சுட்டாரு. கொட்டுக்காளி படத்தில் விடுதலையை விட அடுத்த ஸ்டெப் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் புதிய சூரியை பார்ப்பீர்கள்.
இனிமேல் ஹீரோவாகத்தான் பண்ணுவேன் என்று சூரி இருக்கிறார். கொட்டுக்காளியை காட்ட தயாராக இருக்கிறேன். முதலில் வெற்றிமாறன் கிட்ட தான் காட்டணும். சசிக்குமார் உங்க ஆஃபிஸ்ல படத்துக்கான வாய்ப்பு கேட்டு வந்திருக்கேன். சசிக்குமார் உங்க படத்துல நானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேலும், வடிவுக்கரசி அம்மா நிச்சயமாக எனக்கும் உங்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்த ரோல் பெரியதாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும். அது தான் உங்களுக்கு கொடுக்கும் மரியாதை எனவும், கருடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி உடன் புதிய ஒப்பந்தம்; 200 இளையராஜாக்களை உருவாக்க இசைஞானி விருப்பம்! - ILAIYARAAJA MUSIC LEARNING CENTRE