சென்னை: இரா சரவணன் தமிழில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர். இவர் தற்போது சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
வருகிற 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று (செப்.13) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சசிகுமார், இயக்குனர் இரா சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் எச்.வினோத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தளபதி - 69 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? - வெளியான புது அப்டேட் -
இதில் பேசிய இயக்குனர் எச்.வினோத் கூறுகையில், “இந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்று இயக்குனர் சரவணன் கேட்டுக்கொண்டே இருந்தார். இருவரும் இணைந்து ஏற்கனவே உடன்பிறப்பே என்ற படம் எடுத்தோம். பயங்கர பாசமழையாக இருக்கும் எஸ்கேப் ஆக வேண்டும் என்று தள்ளிப்போட்டுட்டே இருந்தேன்.
ஆனால் படத்தை பார்க்கும் பொழுது நெகிழ்ந்து விட்டேன். நிறைய விஷயங்கள் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. எது நல்ல படம் என்றால் பெரிய பட்ஜெட் படமோ, பெரிய ஹீரோ படமோ கிடையாது, மனிதனை நல்ல மனிதனாக மாற்ற முயற்சிக்கும் படங்கள் தான் நல்ல படங்கள் என்று நான் சொல்வேன். இது அப்படி மாற்ற முயற்சி செய்கிறது. இரா சரவணனுக்காகவோ, சசிகுமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கிற அளவுக்கு நல்லவர் என்பதற்காகவோ சொல்லவில்லை. இது ஒரு சிறப்பான படம்” என்றார்.
இதையடுத்து பேசிய நடிகர் சமுத்திரகனி, “நல்ல படைப்புகள் அதற்கான ஆட்களை அதுவாகவே தேர்வு செய்யும். சசிகுமாரை பொத்தி பொத்தி பார்த்தவன் நான். அவரை இப்படி பார்க்க முடியவில்லை. பெரிய படங்கள் வந்தால் அதற்கு முன் இரண்டு வாரங்களுக்கும் அதற்கு பின் இரண்டு வாரங்களுக்கும் எந்த ஒரு படங்களையும் வெளியிடுவதில் சிக்கல் இருக்கும்.
அந்த பிரச்னையில் கிடைக்கிற நேரத்தில் சின்ன படங்களை வெளியிடுவோம். இந்த படத்தில் இசை பேசியுள்ளது. சசிகுமாரை நந்தனுக்கு முன், நந்தனுக்குப் பின் என பிரித்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சசிகுமார்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சசிகுமார், “சீமான் படம் பார்த்து வாழ்த்திய வார்த்தைகளை எப்போதும் மறக்க மாட்டோம். எச்.வினோத் அவருடைய படத்தின் புரோமோஷனுக்கே வர மாட்டார். அப்படி இருக்கையில் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி உள்ளார்.
சரவணனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. சினிமாவில் யார் உங்களுடன் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் நான் வாங்கிய அடிகள் எல்லாம் விருதுகளாக மாறி விடும். நான் இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த கதையை உள்வாங்கி நடித்தேன். நட்புக்காக உயிரையே கொடுப்போம் அடி வாங்க மாட்டோமா என்ன? சரவணனின் எழுத்துக்கள் பயங்கரமாக இருக்கும். இந்த படம் பாடம் இல்லை, பதிவு. என்னுடைய நடையை மாற்ற வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் ஜிப்ரான் என்னுடைய நடைக்கு ஒரு பிஜிஎம் போட்டு உள்ளார். அட்டகாசமாக வந்திருக்கிறது" என கூறியுள்ளார்.