சென்னை: டப்பிங் கலைஞர்களின் டப்பிங் யூனியன் தேர்தல் மார்ச் நடைபெறவுள்ளது. டப்பிங் யூனியனுக்கு பல ஆண்டுகளாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மார்ச் மாதம் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார்.
டப்பிங் யூனியனுக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, "இந்த தேர்தல் முதலில் நடக்காது என நினைத்தோம். ஆனால், தற்போது நடைபெறவுள்ளது. டப்பிங் யூனியன் கட்டிடம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது என நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
எனக்கு டப்பிங் யூனியனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எண்ணம். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் டப்பிங் யூனியன் புதிய கட்டிடம் திறக்கப்படும். ராதாரவிக்கு கால் உடைந்துள்ளது; எப்படி டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிடுவார் எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நான் உடைந்த காலோடு எப்படி டப்பிங் யூனியனைத் தூக்கி நிறுத்துகிறேன் எனப் பாருங்கள். டப்பிங் கலைஞர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். டப்பிங் யூனியனைப் பொறுத்தவரை எனது அணியை எதிர்த்து யாரும் ஜெயிக்க முடியாது.
மக்களாகப் பார்த்து, நீங்கள் டப்பிங் யூனியனில் இருக்க வேண்டாம் எனக் கூறும் வரை யூனியனில் இருப்பேன். தேர்தலில் எனது அணி கண்டிப்பாக வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராதாரவி தற்போது டப்பிங் யூனியன் தலைவராக இருந்து வரும் நிலையில், அவருக்கும் பாடகி சின்மயிக்கும் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.ஜி விருதுகள் 2024: விருதுகளை அள்ளி குவித்த ஓம்பன்ஹைமர்.. முழுப் பட்டியல் விவரம் இதோ!