சென்னை: அதிமுகவின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜு, அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக நடிகை த்ரிஷாவும், ஏ.வி.ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு புகார் மனுவை, அவர் காவல் ஆணையருக்கு அளித்துள்ளார். அதில் “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நான், திரைப்பட நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன்.
இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தமிழா பாண்டியன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகிய இரு நபர்களும் வெவ்வேறு தனியார் பத்திரிகை பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி பல்வேறு பொய்யான தகவல் மற்றும் சங்கதிகளையும், என் மீது வன்மம் கொண்டு அவதூறாகவும், அருவறுப்பானதாகவும் மற்றும் உண்மைக்கு மாறான செய்தியைப் பரப்பியுள்ளார்கள்.
மேலும் திரைப்பட நடிகை த்ரிஷா மற்றும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும், உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை தனியார் பத்திரிகை பேட்டியிலும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரத்துக்காக பரப்பி வருகிறார்கள்.
அதில் இமி அளவும் உண்மை இல்லாத போதும், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து, பல யூடியூப் சேனலிலும் என்னைப் பற்றியும், நடிகை த்ரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர்.
மேலும் இந்த நபர்கள் எந்த ஆதாரமும் இன்றி என் மீது பரப்பி வரும் பொய்யான தகவலால் என் பெயருக்கும், புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே, காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், பல யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிப்.26-இல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!