சென்னை: யூடியூப் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, சினிமாவில் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் பிஜிலி ரமேஷ்(46). சமீப காலமாகவே உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆக.27) அதிகாலை காலமாகியுள்ளார்.
பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானதாக தகவல்! #பிஜிலிரமேஷ் #BijiliRamesh #BijiliRameshDied #RIPBijiliRamesh #RIP #etvbharattamil #CinemaUpdate pic.twitter.com/bUzBQ7vWVd
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) August 27, 2024
தமிழ் சினிமாவில் தற்போது யார் எப்போது பிரபலமாவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சமூக வலைத்தள உலகில் சினிமாவில் நடிப்பது என்பது அத்தனை கடினமல்ல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி எத்தனையோ பேர் சினிமாவில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு சாதாரண யூடியூப் நிகழ்ச்சி ஒருவருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்தது என்றால் அது பிஜிலி ரமேஷூக்கு தான்.
விஜே சித்து என்பவர் தனது யூடியூப் நிகழ்ச்சி ஒன்றிற்காக சாலையில் நடந்து சென்ற பிஜிலி ரமேஷ் என்பவரை நிறுத்தி பேட்டி எடுத்துள்ளார். அப்போது பிஜிலி ரமேஷூக்கு தெரியாது அந்த பேட்டி தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று. அந்த பேட்டி வைரலாகவே பிஜிலி ரமேஷுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. பிஜிலி ரமேஷ் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். அதன்பிறகு, விஜய் டிவி நிகழ்ச்சிகள், சினிமா என பிஸியானார்.
இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த அவரது வாழ்க்கையில், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீபத்தில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிப்போன அவரது நிலையைக் கண்டு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
யூடியூப் சேனல் மூலமாக பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ் சின்ன சின்ன படங்களில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன்னை ஒரு நடிகராக செதுக்கிக் கொண்டார். ஆனால், சமீபமாக போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குடும்பத்தினர் வறுமையில் இருந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் குறைபாடு ஏற்படவே, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய பிஜிலி ரமேஷ் நள்ளிரவில் உறக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது அவருக்கு வயது 46 ஆகும். அவருக்கு திருமணமாகி கிஷோர் என்ற மகன் உள்ளார். தற்போது, பிஜிலி ரமேஷ் பிரிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதிச் சடங்குகள் இன்று சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் காலமானார்