சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். ஏராளமான ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாகும் போது மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இவரது நடிப்பில் கடந்தாண்டு துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக அஜர்பைஜானின் நடைபெற்றது. சமீப நாட்களாக ஓய்வில் இருந்த அஜித்குமார், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ஆம் தேதி அஜர்பைஜான் செல்ல உள்ளார். இதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அவருக்கு நிறைய பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. பரிசோதனையில் காதுகளுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததாகவும், இதனால் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பதிவிடத் துவங்கினர். பிரபலங்களும் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் அஜித்தை நேற்று பல திரைப்பட இயக்குநர்கள் நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும், அவர்களுடன் நடிகர் அஜித் பேசி மகிழ்ந்ததாகவும், அதனால் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
மூளையில் கட்டி, தொடர்ந்து ICUவில் கண்காணிப்பு, படப்பிடிப்புகள் ரத்து, மூன்று மாதம் ஓய்வு என எந்த வதந்தியும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் கண்டிப்பாகச் செல்வார் என்றும், அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘கார்த்தி 26’ பூஜை வீடியோ வெளியீடு!