சென்னை: இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி ஆகியவை நிலையான வளர்ச்சிக்கான கூட்டு மெய்நிகர் மையத்தை (VCoE-SD) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் லீட்ஸ் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி இடையே தற்போது இருந்து வரும்கூட்டு முயற்சிகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும். அத்துடன் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களில் லீட்ஸ் கல்வியாளர்கள், பிற இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான தொடர்புகளும் ஒருங்கிணைக்கப்படும்.
பல்வேறு முக்கிய துறைகளில் அறிவை மேம்படுத்திக் கொள்வதையும், கண்டுபிடிப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இத்திட்டத்தின்படி உலகளாவிய சவால்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வழிநடத்தும் திறன் கொண்ட பல்துறைக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
பாடத்திட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், விரிவுரைகள் போன்ற கூட்டுக்கல்வி செயல்பாடுகளை ஏற்பாடு செய்யவும், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்கவும்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல், மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பரிமாற்றம், வெளியீடுகள் உள்ளிட்ட இருதரப்புக்கும் உதவும் அம்சங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து குளோபல் பார்ட்னர்ஷிப் ஆலோசகரும், சென்னை ஐஐடிஎனெர்ஜி கன்சார்டியம் தலைவரும், சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவு ஆசிரியருமான சத்தியநாராயணன் சேஷாத்ரி கூறும் போது, “லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் சர்வதேசமாக்கலில் சிறந்து விளங்குவதற்கான வலுவான அர்ப்பணிப்பைக் கொண்டவையாகும்.
முதல் நடவடிக்கையாக நிலைத்தன்மை குறித்து பல்வேறு தலைப்புகளில் மெய்நிகர் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர் பணிகள், இணைந்த டாக்டர், முதுகலைப் பாடத்திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான இருதரப்பு, பலதரப்பு நிதி வாய்ப்புகள் போன்ற குறிப்பிடத்தக்க முடிவுகள் ஆசிரியர்கள் தலைமையிலான செயல்பாடுகளால் கிடைக்கப்பெறும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கணினி ஆய்வகத்தை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி! - GOVERNMENT SCHOOL SMART CLASSES