சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பல்வேறு அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல் வேண்டும்.
மேலும், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' என்ற திட்டம் செயல்படும்.
இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக ஜீன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். அதில், அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல், ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல் வேண்டும்.
பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல் வேண்டும், புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
அதுமட்டுமின்றி, காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டுப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல் வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டடங்களையும், வளாகத்தையும் தூய்மையாக மிளிரச் செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல்
கூடாது. பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல் வேண்டும்.
தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும். அதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் இச்சிறப்பு தூய்மைப் பணி சார்ந்து பணிகள் நடைபெறுவதற்கு முன், பணிகள் நடைபெறும் பொழுது மற்றும் பணிகள் முடிவுற்ற பின் புகைப்படம் எடுத்து School Login பயன்படுத்தி EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தூய்மை பணிகள் நடைபெறும் நாளன்று அலுவலர்கள் பார்வையிட்டு கண்காணிக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.