சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். தற்போது, அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்படும் எனவும், முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பொறியியல் பாடம் குறித்த அறிமுக வகுப்புகள் மாணவர்களுக்கும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புகள் தொடங்கிய பின்னர் மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் டிசம்பர் 13ஆம் தேதி என்றும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி அன்று தொடங்கும் என்றும், செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜனவரி 20ஆம் தேதி (20-1-2025) அன்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் உள்ள இடங்களில் பெரும்பாலான இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கான வகுப்பு துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இட ஒதுக்கீட்டை நசுக்கும் முயற்சியே கிரீமிலேயர்" - திருமாவளவன் கருத்து!