தருமபுரி/ மதுரை: தருமபுரியில் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் இருந்து பூக்கள் பெங்களூரு, ஓசூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. செப்.17 (செவ்வாய்க்கிழமை) அன்று புரட்டாசி மாதம் தொடங்குவதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் வரத்து குறைந்து இருக்கும் நிலையில், பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
கடந்து இரு வாரங்களாக தொடர்ந்து வெயில் அதிக அளவு இருந்ததால் மல்லிகை பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 1 கிலோ மல்லிகை பூ ரூ.500 என நேற்று விற்பனை ஆன நிலையில், இன்று ரூ.1,000-க்கும், சன்னமல்லி 1 கிலோ ரூ.900-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது. பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.200, சம்பங்கி 1 கிலோ 250 ரூபாய்க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.60க்கும், கனகாம்பரம் 1 கிலோ ரூ.1000க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: கோவையில் ஓணம் பண்டிகை.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்!
அதேபோல், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரையின் தனிச்சிறப்பு வாய்ந்த மல்லிகை பூ பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இங்கு ஆவணி மூலத் திருவிழா மற்றும் ஆவணி மாத கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு மல்லிகை கிலோ ரூ.1,500க்கும், முல்லை ரூ.800க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.300க்கும், நாட்டு சம்பங்கி ரூ.500க்கும், செவ்வந்தி ரூ.100க்கும், பட்டன் ரோஸ் ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.200க்கும் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், புரட்டாசி மாதம் முழுவதும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதால் திங்கட்கிழமை முதல் பூக்கள் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.