டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 12 புள்ளி 4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உச்சம் தொட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 2 லட்சம் கோடி ரூபாயாக வசூல் ஆகியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி 43 ஆயிரத்து 846 கோடி ரூபாயும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி 53 ஆயிரத்து 538 கோடி ரூபாயும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 99 ஆயிரத்து 623 கோடி ரூபாயும், செஸ் வரியாக 13 ஆயிரத்து 260 கோடி ரூபாயும் வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரிவருவாய் வசூலான நிலையில், ஏப்ரக் மாதம் வரலாறு காணாத வகையில் வரிவசூல் புது உச்சம் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயாக வரி வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் வசூலான 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலில் 13 புள்ளி 4 சதவீதம் உள்நாட்டு பரிவர்த்தணைகள் மூலமாகவும் 8.3 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவும் வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்ததன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் வரலாறு காணாத வகையில் அதிகமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலங்களுக்கான வரி பகிர்வை தொடர்ந்து மொத்த வரி வசூல் நிகர லாபம் 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதகாவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு வழக்கு: போலீஸ் காவலில் இருந்த ஆயுத சப்ளையர் தற்கொலை! - Salman Khan Case Accused Suicide