ஆந்திரா: தேர்தலில் இவிஎம் இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், ஏனெனில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவைகளை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது என்று எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் கருத்துக்கு பல்வேறு தர்ப்பில் இருந்தும் ஆதரவுகள் எழுந்து வருகின்றன. காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி, இவிஎம் இயந்திரம் கருப்பு பெட்டி போல் மர்மமாக உள்ளதாகவும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வரிசையில், ஆந்திர பிரதேசம் முன்னாள் முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகம் மேலோங்குவது மட்டுமின்றி அது சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
உலகில் மேம்பட்ட ஜனநாயகம் உள்ள நாடுகளில் கூட வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில்லை என்றும் வாக்குச்சீட்டே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டுமென ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இதே கருத்துகள் முன்வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டும் வெற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது.
இதையும் படிங்க: இவிஎம் வரமா? சாபமா? எக்ஸ் தளத்தில் ராகுல், சந்திரசேகர், எலான் மகஸ்க் காரசார விவாதம்! - Elon Musk Rahul EVM Controversy