ஹெலன்ஸ்கி : உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநா வெளியிட்டு உள்ளது. இதில் தொடர்ந்து 7வது ஆண்டாக பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதைத் தொடர்ந்து நார்டிக் நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகள் வழக்கம் போல் டாப் 10 இடங்களில் அங்கம் வகிக்கின்றன.
டாப் 10 வரிசையில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. நார்டிக் நாடுகளை ஒப்பிடுகையில், வட அமெரிக்க நாடுகளில் வயதானவர்களை காட்டிலும் 15 முதல் 24 வயது பிரிவினர்கள் மகிழ்ச்சி குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதல் முறையாக இந்த பட்டியலில் டாப் 20க்கு கீழ் இறங்கி உள்ளன. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 23வது இடத்திற்கும், ஜெர்மனி 24வது இடத்திற்கும் இறங்கி உள்ளது. அதேநேரம், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு உள்ளன.
கோஸ்டாரிக்கா மற்றும் குவைத் முதல் முறையாக டாப் 20 வரிசைக்குள் நுழைந்து உள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 126வது இடத்தில் உள்ளது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்தியா இதே இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வயதான பெண்களை விட முதிய ஆண்கள் வாழ்க்கையில் அதிக திருப்தி அடைந்தவர்களாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாப் வரிசையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் எதுவும் இடம் பெறவில்லை. அதேநேரம் அளவான மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை முறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபரின் பங்களிப்பு, சமுதாய ஆதரவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சுதந்திரம், மக்களின் பெருந்தன்மை மற்றும் இரக்க குணம் மற்றும் ஊழல் உள்ளிட்ட தலைப்புகளின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் - உச்ச நீதிமன்றம்!