பாலக்காடு (கேரளா): கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாரதப்புழா ஆற்றின் மீது சொரனூர் ரயில் நிலையம் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் பலர் நேற்று ரயில் பாதையில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, நேற்று (நவ.03) மதியம் மூன்று மணிக்கு அந்த பாதையை கடந்த டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை அறியாத லட்சுமணன், ராணி, வள்ளி உட்பட தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தூய்மை பணியாளர்கள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு தொழிலாளர்களின் உடல் சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதில் இருந்த மூவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரது உடல் கிடைக்கவில்லை. ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஆற்றில் அந்த உடல் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்! தொழிற்சாலையினர் பேச்சுவார்த்தை!
இந்த சம்பவம் நடந்த போது பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதாகவும், அதில் ரயில் வருவதை அறிந்து ஆறு பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் உயிர்த்தப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையின் அடிப்படையில், இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரும் சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்ப்பட்ட அடிமலைப்புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் அவரது மனைவி வள்ளி, வள்ளியின் தம்பி லட்சுமணன், அவரது மனைவி ராணி என்பது தெரியவந்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, வள்ளிக்கு இரு மகன்கள் இருப்பதும், ராணிக்கு குழந்தைகள் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.