பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் நம்ம மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இரண்டு வண்ண வழித் தடங்களில் மெட்ரோ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை இணைக்கும் வகையிலும் கார்பன் உமிழ்வு உள்ளதாக சுற்றுசூழலை ஊக்குவிக்கும் வகையில் எலக்ட்ரானிக் ஆட்டோகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ள நிலையில், பெண்கள் அதிகபடியான அளவில் ஆட்டோ ஓட்டுநர்களாக இந்த திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். எலச்செனஹள்ளி மற்றும் இந்திராநகர் மெட்ரோ நிலையங்கள் இடையே பயணிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஆட்டோ சேவை உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Alstom India, பெங்களூரு மெட்ரோ மற்றும் மாநில போக்குவரத்து துறை இணைந்து இந்த திட்டத்தை நடத்தி வருகின்றன. பெங்களூரு நகர் பகுதியை ஒட்டி இந்திரா நகர் இருப்பதால் சிறிய முன்னெடுப்பு வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எலச்செனஹள்ளி மற்றும் இந்திராநகர் இடையே இணைப்பு பாலமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதால் சக பெண் பயணிகள் சவுகரியமாக பயணிக்க வசதியாக இருக்கும் என்றும் தனியார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண் ஓட்டுநர்களின் வசதிக்கேற்ப ஷிப்ட் அடிப்படையில் பணியமர்த்தப்படுவதாகவும், குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் இன்றி நாளொன்றுக்கு பெண்களுக்கு 800 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டம் நிறைவுக்கு பின்னர் ஆலோசனை அடிப்படையில் பெங்களூரு முழுவதும் சேவையை நீடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஏர்டெல் நிறுவனர் பாரதி மிட்டலுக்கு இங்கிலாந்தின் உயரிய விருது! இங்கிலாந்து அரசு அறிவிப்பு