சென்னை: நான் இந்தியாவில் தான் பிறந்தேன், வளர்ந்தேன் இங்கேயே நர்சிங் படித்தேன் ஆனால் எனக்கு நிலையான வேலை கனவில் கூட சாத்தியமில்லை என்கிறார், கோவை பூளுவம்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒரு பெண்.
இவரைப் போன்றே கல்வித்தகுதி பெற்ற பலரும், முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். படித்த ஆண்கள் பலரும் பெயிண்டராகவும், கூலி வேலைகளுக்கும் செல்வது இது போன்ற முகாம்களில் இயல்பான காட்சிதான். தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர் மறுவாழ்வு தொடர்பாக மிகச்சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் இடைக்கால அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. எனினும் , குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 104 முகாம்களில் சுமார் 58,200 ஈழத் தமிழர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் 33,200 பேர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 45 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ள மறுவாழ்வு முகாம்களிலேயே பிறந்தவர்கள் என்கிறது தமிழ்நாடு அரசு அமைத்த குழுவின் அறிக்கை. ஈழத் தமிழர்களில் 79 சதவீதம் பேர் இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். முகாம்களில் வசிப்போரில் 25 சதவீதம் பேர் குழந்தைகள். ஈழத் தமிழர்களில் 8 சதவீதம் பேர் இந்திய குடிமக்களை திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு வாழும் ஈழத் தமிழர்களில் 95 சதவீதம் பேர் ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர். வெறும் 1 சதவீதம் மக்களிடம் மட்டுமே இலங்கை பாஸ்போர்ட் உள்ளது. 3 சதவீதம் பேர் இலங்கை குடிமக்கள் என்பதற்கான அடையாள அட்டைகளை வைத்துள்ளனர்.
இலங்கை அகதிகள் முகாம்களின் இன்றைய நிலையை அறிவதற்காக மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களை தேடிச் சென்றது ஈடிவி பாரத் செய்தியாளர் குழு. கோவை பூளுவம்பட்டி முகாமில் நமது செய்தியாளர் சென்றார். பெரும்பாலும் ஓரிரு அறைகளே கொண்ட அந்த குடியிருப்பின் வீடுகளில், மேற்கூரைகள் ஆஸ்பெஸ்டாஸ்ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்தன. பொதுக்கழிவறைகளையே பயன்படுத்தும் நிலை உள்ளது. சுமார் நூறு பேருக்கு ஒன்று என்ற வகையில் தான் இந்த கழிவறைகள் உள்ளன. ஓரளவுக்கு பணம் சம்பாதித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கழிவறை கட்டிக்கொண்டுள்ளனர். சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்துவதால் பெண்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
முகாமில் வசித்து வரும் 12ம் வகுப்பு மாணவி கூறுகையில், "பட்டப்படிப்பு முடித்தவுடன், வங்கிப் பணியில் சேர வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், குடியுரிமை இல்லாததால் என் ஆசை நிறைவேறாது" என கண்களில் எதிர்பார்ப்புகள் ததும்ப தெரிவிக்கிறார்.
நர்சிங் முடித்துள்ள பெண் கூறுகையில், "என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப எனக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், குடியுரிமை இல்லாத காரணத்தால் என்னால் பணியில் சேர முடியவில்லை. தனியார் மருத்துவமனையில் மிகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முகாமிலேயே பிறந்து, வளர்ந்தவர்களானாலும் அவர்களின் பள்ளி, கல்லூரி படிப்பு வரையிலும் பெரிதான எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு என்று துவங்கும் போது கெடுபிடிகள் இறுகத் துவங்குகிறது. முகாம்களை கண்காணித்து வரும் கியூ பிராஞ்ச் போலீசார் வேலைக்கு செல்லத் துவங்கிவிட்டால், குறித்த காலத்தில் தணிக்கையில் நேரில் ஆஜராக வேண்டும் என கெடுபிடி விதிக்கின்றனர். தொடர்ச்சியாக 3 தணிக்கைகளில் ஆஜராக தவறும் பட்சத்தில் 4வது தணிக்கையில் குறிப்பிட்ட நபரின் பதிவு முகாமிலிருந்து நீக்கப்படும். பிரதமர் உள்ளிட்ட எந்த தலைவர்கள் வந்தாலும் முகாமில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படும். இதே போன்ற நிலை தனது பிள்ளைகளுக்கு ஏற்பட்டதால் வேலை வாய்ப்பு பறிபோனதாக கூறுகிறார் பெண் ஒருவர்.
மதுரையில் அகதிகள் முகாம் ஒன்றின் தலைவராக இயங்கக்கூடிய சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், இங்குள்ள தமிழ் அகதிகளில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினரே எனக் கூறினார். 5 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தால் அவர்கள் குடியுரிமை கோரத் தகுதியுடைவர்கள் என்று குடியுரிமை திருத்தச் (CAA) சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த சட்டத்தைக் கொண்டு வரும்போது, இந்தச் சட்டம் அகதிகளுக்குத்தான் பொருந்தும். சட்ட விரோதக் குடியேறிகளுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடுகிறார்கள். அப்போதுதான் எங்களுக்குத் தெரிய வருகிறது. நாங்கள் அகதிகள் அல்ல, சட்ட விரோதக் குடியேறிகள் என்று. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாருக்கு உள்துறை அமைச்சகத்தால் பதில் அளிக்கப்பட்டது. இதில் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகளாகவே அழைக்கப்படுகின்றனர் என தெரியவந்தது. அது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது' என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், 'நாங்களும் அண்டை நாட்டில் பெரும்பான்மை புத்த மதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இன, மொழி ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். அதுமட்டுமன்றி, எங்களில் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அதனாலேயே இங்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் நாங்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அனுப்பப்பட்டனர்.
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்போது 6 லட்சம் பேர் திரும்பி தமிழகம் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊட்டியில்தான் குடியமர்த்தப்பட்டனர். அப்படி வந்தவர்களின் வழித்தோன்றல் தான், திமுக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா. மலையகத்தில் (Hilly Areas of Srilanka) நடைபெற்ற இனக்கலவரம் காரணமாக அங்கிருந்த மக்கள் வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் குடியேறுகின்றனர். அங்கும் தொடர்ந்த கலவரம் காரணமாக, வேறுவழியின்றி தாய்த் தமிழகத்தை நோக்கி அவர்கள் வருகின்றனர் என்றார்.
சுந்தர் மேலும் கூறுகையில், ' இலங்கைத் தமிழர்களில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என இரு பிரிவு உள்ளது. அதனால்தான் எங்களது பிறப்புச் சான்றிதழ்களில் கூட இந்தியத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என இரண்டு பிரிவுகளாகக் குறிப்பிட்டிருப்பார்கள். எங்களுக்கெல்லாம் இந்தியத் தமிழர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். போரின் போது வந்த இலங்கை பூர்வீகக் குடிகள் தற்போது நாடு திரும்பிவிட்டனர். தற்போது இங்கே எஞ்சி தங்கியிருப்பது இந்தியத் தமிழர்கள் தான் பெரும்பான்மை என்கிறார்.
மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் சிஏஏ சட்டம், இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கிறது. இந்தியாவில் இந்து என வரையறுக்கப்படுபவர்கள் வணங்கும் அதே முருகனைத் தான் ஈழத்தில் உள்ள தமிழர்களும் வணங்குகின்றனர். இருவருக்கும் பண்பாடு ஒன்று தான். ஆனால் இவர்களை இந்து என கருதாமல் குடியுரிமை மறுப்பது முரணானது என்கிறார், தமிழ்தேசியவாதியும், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான கு.ராமகிருஷ்ணன்.
முகாம்களில் வசிப்போரின் மணவாழ்வு சட்டங்கள் தொடர்பாக சட்டநிபுணர்களிடம் கேட்ட போது, ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்போர், இந்திய குடிமக்களை திருமணம் செய்தால் இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார்கள். இதன் பிறகு இவர்கள் அகதிகள் முகாம்களில் கிடைக்கும் மானியங்களையோ, உதவிகளையோ பெற முடியாது.
தமிழ்நாட்டில் கடந்த காலத் தேர்தல்களில் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்ற வாக்குறுதி இடம்பெறத் தவறியது கிடையாது. இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றி 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர் மாறினாலும் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் தீரவில்லை என்பது முகாம் வாழ் மக்களின் குரலாக உள்ளது. இந்த தேர்தலிலும் கச்சத்தீவிலிருந்து பிரச்சனையை துவக்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இத்தோடு தங்களுக்கான குரலும் ஒலிக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் முகாம் வாழ் ஈழத்தமிழர்கள்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை?.. மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!