வாரணாசி: நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (மே.14) பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
காலை 11.40 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். குறிப்பாக பிரதமர் மோடி மே 14ஆம் தேதி காலை 11.40 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மே 14ஆம் தேதி கங்க சப்தமி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்து சம்பிரதாய முறைப்படி இன்று புனித நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் இந்துக்கள் கங்கை நதியில் புனித நீராடி பல்வேறு பூஜைகளில் ஈடுபடுவதை நோக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இன்றைய நாள் புஷ்ய நட்சத்திரத்திற்கு உகந்த நாளாக காணப்படுகிறது. கங்கா சப்தமி மற்றும் புஷ்ய நட்சத்திரம் என இரண்டும் இணைந்ததால் இந்த தேதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றியில் போய் முடியும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி குறிப்பாக இன்றைய நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், காலை 11.40 மணிக்கு வேட்புமனு செய்வதற்கு காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்படி மொத்தமுள்ள 15 முகூர்த்தங்களில் 8வதாக உள்ள அபஜித் முகூர்த்தம் மற்றும் ஆனந்த யோகமும் காலை 11.40 மணி அளவில் ஒரே நேரத்தில் இணைவதால் அந்த நேரம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூர்ய அஸ்தமானத்திற்கு இடையே சரியான இடைவெளியில் இந்த அபஜித் மூகூர்த்தம் காணப்படுவதால், இயற்கையிலேயே சிறப்பு வய்ந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக குறிப்பாக மே 14ஆம் தேதி காலை 11.40 மணிக்கு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நேரத்தை பிரமாண சமூதாய உறுப்பினர் பண்டிட் கணேஸ்வர சாஸ்திரி குறித்துக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேரம் குறித்து கொடுத்ததன் காரணமாக இவர் பிரபலமாக அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கலின் போது இவரும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலின் போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாரணாசி தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்! கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம்! - Lok Sabha Election 2024