டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (மே 20) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம் -14, மகாராஷ்டிரா -13, மேற்கு வங்கம் -7, பிகார் -5, ஒடிசா -5, ஜார்கண்ட் -3, ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் லடாக் ஆகிய இரண்டு தொகுதிகள் என மொத்தம் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ள தேர்தலில் மொத்தம் 512 வேட்பாளர்களும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 14 தொகுதிகளில் 466 வேட்பாளர்களும் இன்றைய தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள்: ஐந்தாம் கட்ட தேர்தலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (ரே பரேலி), மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (லக்னோ), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), சாத்வி நிரஞ்சன் ஜோதி (ஃபடேபூர்) மற்றும் ஷாந்தனு தாகுர் (பனாகன்) ஆகியோர் இன்றைய தேர்தலில் மீண்டும் களம் காண்கின்றனர்.
இவர்களை போன்றே, பிகாரில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக திகழும் லோக் ஜனசக்தியின் தலைவரும் , ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் ஹஜிபூர் தொகுதியிலும், பிகார் மாநில முன்னாள் முதவ்வரான லாலு பிரசாத்தின் மகள் ரோஹினி ஆச்சார்யா, சரண் தொகுதியிலும் களம் காண்கின்றனர். ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நட்சத்திர வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட தமது சொந்த கிராமத்தில் வாக்களித்தார். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்துடன் மும்பையில் வாக்களித்தார். பாலிவுட் திரை நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், அனில் கபூர் உள்ளிட்டோரும் மும்பை பகுதியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகனும், இளம் கிரிக்கெட் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர், அஜிங்க்யா ரஹானே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் மகாராஷ்டிரா மாநில தலைநகரில் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ரே பரேலியில் ராகுல் விசிட்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் போட்டியிடும் ரே பரேலி தொகுதிக்கு இன்று வருகை தந்தார். அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் சில வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையி்ட்ட அவர், அங்கு வாக்கு அளித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் சிலரையும் சந்தித்தார். முன்னதாக அவர் பீபாலிஷ்வர் அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி , முன்னதாக ராகுல் காந்தி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், 'இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க. நாட்டு மக்கள் பா.ஜ.க.வை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் நான்கு கட்ட தேர்தல்களில் தெளிவாகிவிட்டது. இந்த தேர்தலில், மாற்றத்துக்கான புயல் நாடு முழுவதும் வீசுகிறது' என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, ஐந்தாம் கட்டத் தேர்தலில் 57.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில், பீகார் - 52.60%, ஜம்மு-காஷ்மீர் - 54.49%, ஜார்க்கண்ட் - 63.00%, லடாக் - 67.15%, மகாராஷ்டிரா - 48.88%, ஒடிஷா - 60.72%, உத்தரபிரதேசம் - 57.79%, மேற்கு வங்கம் - 73% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து: பைகா பழங்குடியின பெண்கள் 17 பேர் பலி!