ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளித்து தாம் அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்ற வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஒப்பந்தத்தின் படி தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. வெற்றி பெற்ற இரு கட்சி எம்எல்ஏக்களும் இணைந்து இன்னும் சில நாட்களில் முதலமைச்சரை தேர்வு செய்ய உள்ளனர். அநேகமாக ஒமர் அப்துல்லா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஒமர் அப்துல்லா அளித்துள்ள வீடியோ நேர்காணலில், "ஒரு யூனியன் பிரதேசமாக பல விஷயங்களை மேற்கொள்ள முடியும்.ஆனால், சில விஷயங்களை செய்ய முடியாது என்பது தெளிவான ஒன்றாகும். எனவே, ஜம்மு-காஷ்மீர் தொடர்ந்து ஒரு யூனியன் பிரதேசமாக மட்டுமே இருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதையும் படிங்க: "ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி?; முதல்வராகிறார் ஒமர் அப்துல்லா!"
இந்த விஷயத்தில் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும். இதனை பின்னர் நம்முடைய தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் அமல்படுத்தப்படும்.
பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்புவும் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற வழக்கில் கூறியிருக்கின்றனர். அதே போல தங்களுடைய உரைகளிலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில்களிலும் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவிரைவாக மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நம்புகின்றேன். அதன் பின்னர் நம்முடைய முதன்மையான பணிகள் தொடங்கும்.
அதே போல மத்திய அரசுடன் ஜம்மு-காஷ்மீர் அரசு நட்புணர்வுடன் இருக்கவே விரும்புகிறது. புதிய அரசு அமைந்த உடன், யார் முதல்வராக தேர்ந்தெடுக்கபடுகிறாரோ அவர், டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மாநில அந்தஸ்து வழங்கும்படி கோரிக்கை விடுப்பார். ஜம்மு-காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இந்திய அரசுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்ளப்படும்," என்று கூறியுள்ளார்.