பெங்களூரு : தமிழநாட்டிற்கு காவிரியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதாக மாநில அரசுக்கு எதிராக போராட்டம் வலுக்கும் நிலையில், பெங்களூருவுக்கு தான் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் தமிழகத்திற்கு இல்லை என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை என்றும் எந்த சூழ்நிலையிலும் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறி உள்ளார்.
தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறித்த விவரங்கள் உள்ளதாகவும், தற்போது தண்ணீர் திறந்து விட்டாலும் தமிழகத்தை காவிரி நீர் சென்றடைய நான்கு நாட்கள் ஆகும் என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு முட்டாள்கள் அல்ல என்றும் சிவக்குமார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவும் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மாண்ட்யா மாவட்டத்தில் நடைபெற்ற ரைதா ஹித்ரக்ஷனா சமிதி திட்ட விழாவில் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து மலவாலியில் உள்ள சிவன் சமநிலை நீர்தேக்கத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதாகவும் அங்கிருந்து பம்புகள் மூலம் பெங்களூருவுக்கு தண்ணீர் சப்ளை மேற்கொள்ளப்படும் என்றும் மாறாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை எனக் கூறினார்.
முன்னதாக கர்நாடகவை ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியான திமுகவிற்கு உதவும் வகையில் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டு மாநில விவசாயிகள் மற்றும் பொது மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "26 நாட்கள் எஸ்பிஐ வங்கி என்ன செய்தது?"- உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி! தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ மனு தள்ளுபடி!