ஆந்திர பிரதேசம்: ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (மே 13) ஒரேகட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெனாலி பகுதியில் போடியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ., வாக்காளர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த தெனாலி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRC) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சிவக்குமார் இந்த முறையும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு சென்றவர், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களில் ஒருவர், சிவக்குமாரை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த வக்காளரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார். வாக்காளரும் எம்.எல்.ஏ வை பதிலுக்கு தாக்கியுள்ளார். இதனையடுத்து, எம்.எல்.ஏ சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கியுள்ளனதாக தெரிகிறது. எம்.எல்.ஏ., வாக்காளரை அறையும் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம், “ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அராஜகத்தை ஒழிக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளனர். ஆந்திராவின் பல்வேறு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே தொடர் மோதல் சம்பவம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.