விஜயபுரா: கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்தலிங்க முத்தான ஜாத்ரா கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்சியானா கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தலிங்க கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் இழுத்து வழிபட்டனர். இந்த திருவிழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எதிர்பாராத விதமாக 7 பேர் தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்.
அதில், சோபு சிண்டே(51), சுரேஷ் கடகதோண்டா(36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அபிஷேக் முஜகொண்டா(17) என்ற சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த 4 பேர் விஜயப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, கோயில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இண்டி போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, கடந்த 6ஆம் தேதி பெங்களூரில் உள்ள மதுரம்மா தேவி கோயில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் வடம் இழுத்துச் சென்ற 150 அடி தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, தேர் ஒரு புறம் சாய்வதைக் கண்ட பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தப்பித்தனர்.