டெல்லி : ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் களம் சூடபிடிக்கத் தொடங்கி உள்ளது. நூதன பிரசாரங்கள் மூலம் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணி, பிரசாரக் கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். நாளை (ஏப்.4) தமிழகம் வரும் அமித்ஷா இரண்டு நாட்களில் 4 இடங்களில் வாகன பேரணி மற்றும் ஒரு பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை (ஏப்.4) மதியம் தேனியில் வாகனப் பேரணியில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஈடுபடப் போகிறார். அதைத் தொடர்ந்து மாலை மதுரையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அதைத் தொடர்ந்து அன்றைய நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மறுநாள் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முக்கிய இடங்களில் வாகனப் பேரணியில் ஈடுபட உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, அதைத் தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆசாத் நகர் ஜங்சன், கடைசியாக கன்னியாகுமரி மாவட்ட தக்கலை ஆகிய இடங்களில் அமித்ஷா வாகனப் பேரணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால் தமிழகத்தில் பாஜக தனது காலடியை வலுப்படுத்த தீவிரமாக முயற்சிப்பது மட்டுமல்லாமல் தேசிய அளவிலான அரசியல் அரங்கில் தமிழகத்தின் மீதான அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும் கோடிட்டு காட்டுவதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமலக்காத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு! - Delhi HC On Arvind Kejriwal Plea