திருச்சூர்: எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE) கே.வினோத் என்பவரை கேரளாவில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர் தள்ளிவிட்டதில் டிடிஇ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்குக் கிளம்பிய எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 7.00 மணிக்கு திருச்சூரை வந்தடைந்துள்ளது. அப்போது ரயிலில் இருந்த S-11 பெட்டியில் கேரளாவில் பணிபுரியும் ஒடிசாவைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ரஜினிகாந்த் என்பவர் டிக்கெட் இல்லாமலும், குடிபோதையில் ஏறியுள்ளார்.
சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வினோத், டிக்கெட் கேட்டு வந்துள்ளார். ரஜினிகாந்த்திடம் டிக்கெட் இல்லாத காரணத்தால், "டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், போதையிலிருந்த ரஜினிகாந்த் திடீரென வினோத்தை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
திருச்சூர் அருகே வேலப்பய என்ற பகுதியில் ரயிலிலிருந்து கீழே விழுந்த வினோத்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளத்தில் விழுந்த அவர் உடல் மீது எதிரே வந்த மற்றொரு ரயில் சென்றதால், வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ரயில் பாலக்காடு வந்ததும், தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் வடமாநில தொழிலாளி ரஜினிகாந்த்-தை உடனடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், டிடிஇ வினோத் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த பாலக்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த கே.வினோத்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் கே.வினோத். ஆரம்ப காலத்தில் ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் ரயில்வே துறையில் பணியாற்றிய வினோத், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே டிக்கெட் பரிசோதகராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வினோத் தனது வேலையைத் தவிர்த்து ஒரு கலைஞராகவும், ரயில்வே ஊழியர் சங்கத்தில் பதவிகளிலும் இருந்துள்ளார். மேலும், தனது நடிப்புத் திறமையால் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போலீஸ் கதாப்பாத்திரம் உள்ளிட்ட சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ரயில்வே மற்றும் சினிமா வட்டாரத்தில் பணிபுரியும் சக ஊழியர்களிடையே நட்புடன் பழகக் கூடியவர் எனவும் கூறப்படுகிறது.