மகாராஷ்டிரா: அமராவதி யவத்மால் பகுதியில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ரவி நகர் மற்றும் ருக்மனி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 20இளைஞர்கள் கொண்ட ஒரு குழு கிளம்பியுள்ளது. இந்தக் குழு அமராவதி செல்வதற்காக டெம்போ டிராவல்ஸ் மூலம் பதிவு செய்து பயணத்தைத் தொடங்கியுள்ளது. அப்போது அமராவதி நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞர்களின் பேருந்தின் பின்னால் சென்ற கான்கிரீட் கலவை கலக்கும் லாரி ஒன்று வந்துள்ளது.
சரியாகக் காலை 9மணியளவில் நந்தகான்-கண்டேஷ்வர் அருகே ஷிங்னாபூர் பகுதி வழியாகச் சென்றுள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அமராவதியில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற இளைஞர்களின் வாகனத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், ஸ்ரீஹரி ரவுத், ஆயுஷ் பஹலே, சுயாஷ் அம்பார்டே, சந்தேஷ் பாதர் என்ற நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 15 இளைஞர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அமராவதியிலுள்ள பிரபல் RIMS மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பெற்றோர்கள் இளைஞர்களின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள RIMS மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சோலங்கே கூறுகையில், "விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 15 இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார். இந்தக் கோர விபத்தில் 4இளைஞர்கள் உயிரிழந்தது, பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏற்காட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு!