கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில், வேலைவாப்பு வழங்க உறுதி, அனைவருக்கும் வீடு, குடியுரிமை திருத்த சட்டம் சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மக்கள் நலத் திட்டங்கள் பல நாட்டில் அமல்படுத்தப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் டெரீக் ஒ பிரையன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மேலும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியருக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம், அனைவருக்கும் வீடு, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
மேலும், ஆட்சியில் உள்ள பாஜக ஜமீன்தார்களை தூக்கி எறிந்து அனைவருக்குமான ஆட்சியை வழங்க ஒன்றுபடுவோம்" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த தேர்தல் அறிக்கையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 சிலிண்டர்கள் இலவசம், வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட் வாக்குறுதிகளும் இடம் பெற்று உள்ளன.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாத நிலையில் மேற்கு வங்கத்தில் தனித்து வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி முதற் கட்ட தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
பாதுகாப்பு காரணமாக மதுபான கடைகள், பட்டாசு கடைகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளன. மேலும், விதிகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? என்ன சொல்கிறார் ராகுல்? - Lok Sabha Election 2024