குண்டூர்: திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை கண்டித்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் குண்டூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் 11 நாள் பரிகார விரதத்தை (பிரயாசித்த தீக்ஷா) தொடங்கினார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பதி வெங்கடாஜலபதியிடம் மன்னிப்பு கேட்க 11 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்திருந்தார். அந்தப் பதிவில் அவர், "நமது கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் மையமான ஸ்ரீ திருப்பதி பாலாஜி கோவில் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
உண்மையைச் சொன்னால், நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். இப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, 11 நாள்கள் உண்ணாவிரத சபதம் எடுத்து வருகிறேன். 11 நாள் பரிகார தீட்சைக்குப் பின்னர் அக்டோபர் 1, 2ம் தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசித்து பாவமன்னிப்புக் கோரி எனது பரிகார தீட்சை நிறைவுபெறும்." என குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம் கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் கொள்கைகளின் விளைவாக தூய்மையற்றதாக மாறியுள்ளது. இந்த பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் போனது இந்துக்கள் மீதான கறையாகும்.
லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள் இருந்ததை அறிந்த நொடியே அதிர்ச்சி அடைந்தேன். குற்ற உணர்வாக உள்ளது. மக்கள் நலனுக்காக நான் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே என் கவனத்துக்கு வராதது வேதனை அளிக்கிறது." என குறிப்பிட்டிருந்தார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்ததோடு, தெலுங்கு தேசம் கட்சி மத விஷயங்களை அரசியலாக்குகிறது என குற்றம் சாட்டினார்.