டெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய ஆட்சியின்போது, திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு அடங்கிய தரமற்ற நெய்யை பயன்படுத்தியதாக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர கதியில் குற்றம்சாட்டியதற்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் எம்பி சுப்பிரமணியன் சுவாமி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், சுதர்சன் செய்தி தொகுப்பாளர் சுரேஷ் சவாங்கே ஆகியோர் இந்த வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பீகாரில் கடும் வெள்ளப்பெருக்கு!
இந்நிலையில் இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, "இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க இன்னும் உறுதியான ஆதாரம் இல்லை" என கூறியதுடன், "குற்றச்சாட்டுகள் குறித்து அரசு ஏற்கெனவே விசாரணைக்கு (எஸ்ஐடி) உத்தரவிட்டிருந்த நிலையில், இது குறித்து பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?" என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
திருப்பதி கோயிலில் லட்டுகள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக உறுதியாக முடிவு செய்ய, முதலமைச்சரிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என நீதிபதி கவாய் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், "நீங்களே விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இதனை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? குறைந்தபட்சம் கடவுளையாவது அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். லட்டு தயாரிக்கும் பணியில் நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு முதன்மையான ஆதாரம் எதுவும் இல்லை." என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் திருமலை - திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாக அதிகாரியே முதலமைச்சரின் குற்றச்சாட்டில் முரண்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அப்போது, "மனுதாரர்கள் செய்தித்தாள் தகவல்களை நம்பியுள்ளனர். சில டேங்டர் நெய் மாதிரியை வைத்து இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது" என, டிடிடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா கூறினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு முன் இந்த அறிவுறுத்தலை எடுத்துக்கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால், ஏதோ ஒன்றிரண்டு டேங்கர்களுக்குப் பதிலாக ஒவ்வொரு டேங்கரிலிருந்தும் மாதிரியை எடுத்திருக்க வேண்டும்." என்றனர்.
மேலும், "எஃப்ஐஆர் பதிவு மற்றும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படுவதற்கு முன்பே முதல்வர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர் முன்கூட்டியே தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதல்ல என்பதை நாங்கள் முக்கியமானதாக பார்க்கிறோம்" என்றனர்.
மேலும், அரசு அமைத்துள்ள எஸ்ஐடி விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்பதைத் தெரிவிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. பின்னர் இந்த வழக்கை வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்