ஆந்திரா: திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டுவின் தரத்தில் தனி கவனம் செல்லுத்தியுள்ளோம் என லட்டு தரம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுக்கு தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் பதிலளித்துள்ளார். திருப்பதியில் பக்தர்களுக்கு ஏற்படும் குறைகளை தெரிந்து கொள்வதற்கும், களைவதற்கும் குறைத்தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
TTD-யின் Dial your EO திட்டத்தின் மூலம் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் பக்தர்களிடம் குறைகளை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து பதிலளித்து வருவார். அந்த வகையில், திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரசாதமாக தரப்படும் லட்டுவின் தரம் மற்றும் சுவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சியாமளா ராவ் உறுதியளித்துள்ளார்.
ஏழுமலையானை மூலஸ்தானத்திற்கு அருகாமையிலிருந்து தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு உள்ளதா என மச்சிலிப்பட்டினத்தை சேர்ந்த பக்தர் எழுப்பிய கேள்விக்கு, திருப்பதியில் அதிக பக்தர்கள் கூடுவதால், சுவாமியை அருகில் இருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது என பதிலளித்தார்.
விஐபி தரிசனத்திற்கு பரிந்துரை?: விஐபி தரிசனத்திற்கு தெலங்கானவின் மக்கள் பிரதிநிதிகள் தரும் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ஆந்திராவின் மக்கள் பிரதிநிதிகள் தரும் பரிந்துரை கடிதங்கள் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதிக்கப்படுவதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, சிஆர்பிஎஃப் (CRPF),பிஎஸ்எஃப் (BSF) போன்ற மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பரிந்துரை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதுகுறுத்து ஆலோசிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசனத்தில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக, கோயில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. அதே போல, விதிமுறை பிரிவின் கீழ் வரும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் எலிகள் சுற்றி வருவதால், லட்டுக்களை எலிகள் சாப்பிடும் அபாயம் உள்ளது. அதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என பக்தரின் குற்றச்சாட்டுக்கு, இது தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக கட்டணமில்லா எண்ணில் புகார் செய்ய வேண்டும். விரைவில் பிரச்னைகளை சரிபார்த்து தீர்வு காண்போம் என பதிலளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "திருப்பதியில் ஓலை பெட்டியில் லட்டு வழங்க திட்டம்" - இதுக்கு இதான் காரணமா?