டெல்லி: மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இன்று (ஜூன்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் மத்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளதாகவும் இதுவரை 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுவரை வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை என்றார்.
மேலும், நீட் தேர்வு வினாத் தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற ஆயிரத்து 563 மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்துவது குறித்த நீதிமன்றத்தின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அதை செயல்படுத்த கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வில் எந்தவித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் இதுவரை 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அது குறித்து பதிலளிக்க அரசு தயராக இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
ஒரு தேர்வுக்கு இரண்டு செட் வினாத் தாள்கள் தயாரிப்பது என்பது புதிய நடைமுறை அல்ல என்றும், கடந்த பல ஆண்டுகளாக தேர்வு முகமை அந்த பாணியை கடைபிடித்து வருவதாகவும், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே இறுதியான வினாத் தாள் எது என்பது உறுதி செய்யப்படும் என்றார்.
அதனால் 6 மையங்களில் தவறான வினாத் தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனால் 40 நிமிடங்கள் வரை கால தாமதம் ஏற்பட்டதாக கூறினார். அதனாலே மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் அதுவே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று, இரண்டு செட் வினாத் தாள்கள் தயாரிப்பு என்பது திடீர் பழக்கம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி குறிப்பிட்ட 1, 560 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதனால் ஜூலை மாதத்தில் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நீட் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகளை அடுத்து மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் கருணை மதிப்பெண் ரத்து; 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! - NEET Re Exam