டெல்லி: நீட் தேர்வு குளறுபடிகள் குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன்.18) விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், நீட் தேர்வில் 0.001 சதவீதம் அளவு குளறுபடி நடந்திருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும் என்றும், யார் ஒருவர் அலட்சியமாக செயல்பட்டு இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
முறைகேடுகள் செய்து அதன் மூலம் மருத்துவராகும் தனிநபர் ஒட்டுமொத்தமாக அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறக் கூடிய சூழலை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வரும் நிலையில், இந்த முறைகேடு புகார்களால் அவர்களது கனவு கலையும் வண்ணம் மாறிவிடக் கூடாது என்றும் தெரிவித்தனர்.
தேசிய தேர்வு முகமை நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், தவறு ஏதேனும் நடந்திருந்தால் அதை ஒப்புக் கொண்டு அதை சரி செய்வதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும், அதன் மூலம் தேர்வு முகமையின் செயல்திறன் மீது குறைந்தபட்ச அளவிலான நம்பிக்கையை கொண்டிருக்க உதவும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்கக் உத்தரவிட்டு நீதிபதிகள் நோட்டீஸ் வழங்கினர். இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் மற்றும் பெருவாரியான அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது என பல்வேறு முறைகேடு புகார்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகளை ஆராயவும், மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரியும் பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
மேலும், ஆயிரத்து 563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் குறித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து 1,563 மாணவர்களின் கருணை மதிப்பெண் திரும்பப் பெறுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. மேலும், ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்..! இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி! - Rahul Gandhi resign wayanad